Friday, August 17, 2012

ரத்த க்ளூகோஸ் மானிடரும், என் தடுமாற்றமும் - 3


இதற்கு முந்தைய பதிவுகளுக்கு இங்கே இங்கே

அடுத்து, உங்கள் இரத்த சர்க்கரை சோதிக்க சிறந்த நேரம் எப்போது என்ற கேள்வி.

மருத்துவர்கள் பொதுவாக காலை வெறும் வயிற்றில், மற்றும் மதிய உணவுக்கு முன்  சோதிக்க சொல்கிறார்கள். இது வெறும் வயிற்றில் என்பதால்,120mg/dl என்று காண்பித்தால், நல்ல ரீடிங்காக தோன்றக்கூடும். ஆனால் ஒவ்வொரு உணவுக்கு பிறகும் , சோதித்தால்,(ஒரு மணி நேரம் கழித்து) இரத்த சர்க்கரை ஒருவேளை 250 mg / dL  என்று தெரிய வரலாம்.இந்த அதிகமான அளவை காலை வெறும் வயிற்றில் ரீடிங் எடுக்கும் போது ,அறிய முடியாது.

குறிப்பாக சமீபத்தில் கண்டறியப்பட்டது என்னவென்றால், டைப் 2 நீரிழிவு உள்ளவர்களுக்கு, இன்னும் சில பீட்டா செல் செயல்பாடு தொடரும் நிலையில் உள்ளவர்களுக்கும் ,அந்த உணவு உள்ளே போன பின், சக்கரை அளவு, ஏற்று முகமாக இருப்பதினால், எச் பி A1c உயர்வதும், மற்றும் சில சிக்கல்கள் வரவும் நேரிடலாம்.

நீங்கள் உங்கள் இரத்த சர்க்கரை காலையில் மட்டும் சோதித்து, சாப்பாட்டுக்கு பிறகு சுர்ரென்று ஏறுமுகம் ஆகும் போது, எந்த உணவினால் அப்படி ஏறுகிறது என்று தெரியாமல் விழிக்க வேண்டி வரும். அதனால் எந்த ஆபத்தான  உணவுகள் , உங்களுக்கு நச்சு என்பதை கண்டறிய முடியாது.


.இப்போது, பரவலாக மக்கள் , மிகவும் விலை உயர்ந்த இரத்த சர்க்கரை பரிசோதனை பட்டைகள் மூலம் பரிசோதனை செய்வதை, காண்கிறோம். இது பணம் செலவு தான். ஆனால்,  திறமையாக முடிந்தவரை, ஒவ்வொரு பட்டையும் பயன்படுத்தி,அதனால் நன்மை அடையலாம்.

முதலில்,சோதனை விளைவுகளை, ஒரு குறிப்பீடாக , நோட்டு புத்தகத்தில் ஒவ்வொரு முறையும், பதிவு செய்து கொள்ள வேண்டும்.
என்ன உணவு சாப்பிட்டபின், இந்த ரீடிங் எடுத்தோம் என்பதும் பதிவு செய்யப்பட வேண்டும்.

இதனால் சக்கரை அளவு ஏறியவுடன், எந்த உணவினால் , இந்த விளைவு ஏற்பட்டது  என்று அறிவது எளிது,சாப்பிட என்ன பொருந்தும் என்று அறிவதும் சுலபம்.

சாப்பிட்ட எந்த உணவு அதிக அளவுக்கு சர்க்கரையை உயர்த்துகிறதோ, அந்த உணவை தவிர்த்து விட வேண்டும்.இரத்த சர்க்கரை உயர்த்தாத உணவுகளை எளிதாக கண்டறியலாம்.
இரத்த சர்க்கரை உச்சத்தை அடையும் போது தேவையான தகவல்களை சேமித்து , வைப்பதில் சில முறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

இங்கே, இலக்கு ,சிக்கல்கள் தரும் அளவுக்கு  கீழே , இரத்த சர்க்கரை உச்சங்களை(பீக் சுகர் லெவல்) கொண்டு வருவது தான். இதை கணக்கிட,இரத்த சர்க்கரை அதன் உச்ச அளவை அடையும் போது ,அளவிட வேண்டும்.

இதை அறிய கடைபிடிக்க பட்ட ஆராய்ச்சிகளில் , ஒரு சராசரி நபருக்கு , உணவு உண்ட 75 நிமிடங்கள் கழிந்த பின், இரத்த சர்க்கரை உச்ச அளவை அடைகின்றன, என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் , தனி மனிதனின் உடல் அமைப்பு, ஒருவர் போல் மற்றொறுவர் இல்லை. தனித்தனமை உள்ள மனிதர்கள் ஆதலால்,  அவரவர் தம் இரத்த சர்க்கரை உச்சம் ஏற்படும் நேரம் எப்போது என்று கண்டறிவது, மிக முக்கியம்.

சாப்பாட்டிற்கு பிறகு,1 மணி, 1.5 மணி நேரம், 2 மணி நேரம், மற்றும் 3 மணி நேரத்தில் ,மூன்று வேளைகளிலும் பரிசோதிக்க வேண்டும்.இப்பொது  உச்ச கட்டம் எந்த சமயத்தில் நிகழ்ந்தது என்று தெரிய வரும். அதை அறிந்த பின், தொடர்ந்து அதே நேரங்களில் பரிசோதனைகளை செய்யும் வழக்கம் வைத்துக் கொள்ளலாம்.’எனக்கு தூக்க நேரம், எனக்கு ஆபீசில் முடியாது’ என்ற சாக்கு போக்குகளை, டயபிடீஸ் அரக்கனை மனசில் வச்சு, உதறுவதும் நல்லது.

டெஸ்ட், நம்மளே செய்துக்கலாம் என்ற தைரியமே , பாதி கிணறு தாண்ட வைக்கும். மேலும், திரும்ப திரும்ப சோதனைக்கு, செல்வது கட்டுபடியாகாது. அந்த ஊழியர் நம் ரத்தம் சிரிஞ்சில் எடுப்பது ஒன்றும் சுகமான அனுபவம் இல்லையே!


குறிப்பை பார்த்து, சாம்பார் சாதம் சாப்பிட்ட பிறகு இருக்கும் ரீடிங்க் எகிறித்து என்றால்… அந்த நிமிடமே அதற்கு முழுக்கு போடுவது நலம்!

மற்ற வகைகளும் வேறே மாதிரியான ரீடிங்க் காட்டும் விசித்ரமும் உண்டு. சரி அரிசி சாப்பிட்டால் , எகிறுது, சப்பாத்தியை ஒரு கை பார்த்து ரீடிங்க் எடுத்தால் , அது இன்னும் அதிகமாக காட்டலாம். அதே சமயம்,
பக்கோடாவுக்கு ஒரு குறைவானதாகவும் , உருளை கிழங்கு பஜ்ஜிக்கு அதிகமும் காட்டும் விசித்ரமும் உண்டு. காலி ப்வளர் , குறைவாக காட்டலாம், பீன்ஸ் மிக அதிகமாக இருக்கலாம்.
 

இட்லீ என்பது எவ்வளவு எளிய உணவு,அதிக ரீடிங்க் காட்டும் வேதனை.. அதே சமயம்  ஆம்லெட் சாப்பிட்டால், குறைவான ரீடிங் வருவதும் சகஜம்.வெண்ணெய். சீஸ் போன்றவையும் குறைவான ரீடிங் காட்டலாம்.
ப்ரெட், பொதுவாக எல்லோருக்கும் அதிகமாகவே காட்டுகிறது.

பல வாரங்கள் இந்த பரிசோதனைகளை , செய்ய வேண்டிய கட்டாயம், உள்ளது. பல வகை உணவுகளை மாற்றி உண்ணும் போதும் குறிப்பில் எழுதி ரீடிங்க் எடுக்கவேண்டும். ஒரு சில நாட்களுக்கு பிறகு, இந்த ரீடிங்க் எடுப்பது பழக்கமாகி விடும். ஸ்டைலாக, கருவியை உருவி , பர பரவென்று, ஊசியால், குத்தி , ஒரு பார்வை பார்த்து, ரீடிங்கை படித்து, வீட்டில் மத்தவங்களை ஒரு லுக் விடுவதில்…. ஒரு சுகம்!

பரிசோதனைகளில் , ஒரு சீரான முறையில்,  முடிவுகளை காணலாம். இதிலிருந்து, எந்த நேரம் , சர்க்கரை அதிக அளவை அடைகிறதோ, அதை வழக்கமான , பரிசோதனை நேரமாக ஏற்றுக் கொள்ளலாம்.(நான் உணவுக்கு ஒரு மணி பிறகு, அளப்பது வழக்கம்).

ஏற்றுக்கொள்ள முடியாத அளவு உச்ச கட்ட ரீடிங் காண்பிக்கும் உணவுகளை தவிர்ப்பது கட்டாயம் கடைபிடிக்கவேண்டும்.

சரி, டெஸ்ட் செய்து விட்டு, உணவுகளை தவிர்ப்பதில் தயக்கம் காட்டி , மாற்று உணவுகளை உண்ண முயற்சிக்காவிடில், சோதனை பட்டைகளை வாங்கி பணம் வீணடிப்பதில் என்ன பயன்?

இந்த மாதிரி சக்தி வாய்ந்த கருவியை பயன்படுத்தி , நீரிழிவு நோய் உள்ளவர்கள் , உடல் நிலையை ஆரோக்யமாக வைத்திருக்க, முயற்சி செய்யவேண்டும். இதற்கு ஒரே வழி,கார்போஹைட்ரேட் உணவு குறைத்து உண்பதே. இவை தான் இரத்த சர்க்கரை உயர்த்தும் லேபிள். ,அவை ‘நல்ல கார்போவோ,’ அல்லது "குறைந்த கிளைசெமிக்" (என்று பரவலாக விளம்பரப்படுத்தப்படுகின்ற வகைகள்) உள்ளதோ,எதுவானதானாலும்!

இரத்த சர்க்கரை அளவு , எந்த  உணவு உண்ட பிறகு மிகவும் அதிகமாக இருக்கிறது என்றால்,(உ.ம். அரிசி சாப்பாடு, அல்லது சப்பாத்தி, அல்லது ஓட்ஸ்..) அந்த கார்போஹைட்ரேட் உணவை,எங்கிருந்து வந்தது என்பதை தீர்மானித்து, குறைத்தோ அல்லது முற்றிலும் அதை அகற்றியோ விட வேண்டும்.
ஊட்டச்சத்து 'லோ கார்ப்' எங்கே என்று கண்டறிய உதவும் அட்டவணைகளை நெட்டில் பார்த்து , உணவு வகைகளை , தயாரிக்கவும் உண்ணவும் பழக்கம் செய்து கொள்வது நல்லது. 

கீழே உள்ள இந்த இலக்குகளை பயன்படுத்தி  நல்ல ஆரோக்யத்துடன் சீரான இரத்த சர்க்கரை அளவும், எச் பி A1c அளவு 5% வாக்கிலும் அடைவது சாத்தியமே.

சாப்பிட்ட பிறகு ஒரு மணி நேரம்: 140 கீழ் mg / dl (7.8 mmol / L)
சாப்பிட்ட பிறகு இரண்டு மணி நேரம்: 120 கீழ் mg / dl (6.7 mmol / L)
நீங்கள் இதை விட சிறப்பாக செய்ய முடியும் என்றால், அது போனஸ்.
சாதாரணமாக  120 mg / dl கீழே போவது அரிது.
எப்போதாவது 100 (கீழ் சாப்பிட்ட பிறகு 2 மணி நேரத்தில்) 100mg / dl. ஆகவும் வாய்ப்புகள் உண்டு.

எனக்கு, முதல் சில மாதங்கள், அரிசி உணவும், கோதுனை உணவும், மிக அதிக அளவாக காண்பித்தன. அதை தவிர்த்து , காய் கறிகளை அதிகமாக்கி, மோர் அதிகமாக சேர்த்து, சக்கரை அளவு குறைந்ததை , கண்டேன். குறைந்த அளவில் உண்டு, மீண்டும் இரண்டு மணி நேரத்தில் பசித்தால், பழ வகைகளை அளவாக உண்டு சமாளித்தேன். இப்போது, எந்த உணவு எனக்கு ஒவ்வாது என்று அத்துப்படி ஆகி விட்டது.
விருந்துகளில் , முன்பெல்லாம், ப்ளேட் மீதும், அடுக்கப்பட்ட உணவு மீதும் பார்வை இருக்கும். இப்போது, நண்பர்களை தேடி பிடித்து , பேசி, மகிழ்கிறேன். ப்ளேட்டை பார்ப்பதே கிடையாது. இனிப்பு வகைகள் அறவே ‘நோ,நோ’.. வீடு வந்த பிறகு, ஒரு பழம் , பால் உள்ளே தள்ளி, ஆரோக்யமாக இருக்க முயற்சிக்கிறேன்.

உறவுகளும், கேள்விகள் கேட்பதை நிறுத்தி, அசுவாரசியம் அடைந்தாயிற்று. 'உடல் இளைச்சாப்போல இருக்குதே' என்று விசாரிப்புகளும் அதிகமாகி விட்டது. ஒரு சிலர் டயட் ரகசியத்தை பகிர்ந்து கொள்வதில் ஆர்வமும் காட்டுகிறார்கள். அமர்த்தலாக, 'லோ கார்போ டயட்' என்று பீத்திக்கொள்கிறேன். 


பின் குறிப்பு. இது என் அனுபவங்கள். மேலும் விவரங்களுக்கு , ஆலனின் புத்தகத்தை படிக்கவும். அவரது பதிவுகளும் உண்டு. எந்த மாதிரி மாற்றத்தையும், டாக்டரிடம் கலந்து ஆலோசித்து முடிவெடுப்பது தேவை.



 Images. Courtesy Google.

Friday, June 15, 2012

ரத்த க்ளூகோஸ் மானிடரும், என் தடுமாற்றமும் - 2


சரீங்க! எவ்வளவு அதிக சுகர் இருந்தாலும் எவ்வளவு நாளா இருந்தாலும், மாற்றங்களால் இதை மறுபடியும் கட்டுக்குள் கொண்டு வர , சில வழிமுறைகள் உள்ளன.

டயடீசியன் சொன்னதையும் டாக்டர் சொன்னதையும் , பின்பற்றி, வேறே மாற்றங்கள் செய்ய தயங்குபவர்களுக்கு , என் , குறிப்புக்கள், பயனில்லை.

Alan shanley சொல்வதை , பின்பற்ற, கொஞ்சம், அதிக முயற்சி எடுத்தால், ஆரோக்யம் முன்னேற அதிக வாய்ப்புகள் கிடைக்கும், தயாரா?

உங்களை ஒன்னும் ஒலிம்பிக்ஸ் ஓடவோ,இலை, தழை மாத்திரம் சாப்பிடவோ சொல்லப் போவதில்லை. ஒரு சில மாத்தம் செஞ்சு, நம்ப நம்ப திண்டி,  நமக்கு சாதகமாகி நாம்ப, இன்னும் பல வருடங்கள் இந்த diabetes- கூடவே , வாழ்க்கை நடத்த முடியுமே.,என்ற சபலம் தான். ஆசை யாரை விட்டது?

Type 2 diabetes உள்ளவர்கள், நீண்ட கால திட்டமாக, ஒரு ஆரோக்யமான உற்சாகமான வாழ்க்கை வாழவும், blood glucose அளவு கட்டுப்பாட்டில் வைக்கவும், வீட்டில், சோதனை செய்யவது, உடல் எடையை கட்டுப்படுத்தவது, மிதமான உடற் பயிற்சி செய்வது போன்வற்றை கடைபிடிக்க வேண்டியது மிக நன்று.

அவ்வபோது , பரிசீலிக்க வேண்டியவை; வெறும் வயிற்று பரிசோதனை, சாப்பாட்டுக்கு முன்னால், பின்னால், அவ்வப்போது, சோதனை, (எல்லாம், Blood glucose test meter,வழியாக). HbA1C test - மாசத்துக்கு  ஒரு முறை.

பொதுவாக டயட்டீசியன், ‘ஒரு சரிவிகித உணவு சாப்பிடணும், கொழுப்பை தவிர்க்கணும், தானியங்கள் சேர்க்கணும், பழம் காய்கறிகள், சேத்துக்கணும்’ என்று, அறிவுறை கொடுப்பார்கள்.
சரி, கொஞ்ச நாட்கள் கழித்து , டெஸ்ட், பண்ணால், அதிக மாற்றம் இல்லாமல் போகும் !.
என்னதான் செய்யலாம் என்று நெட்டில் மேய்ந்தாலோ, மறுபடி கன்சல்ட் செய்தாலோ, ‘அதிக கார்போ(மாவு சத்து, ) சாப்பிடுங்கள்’ என்று யோசனை வரும்.


எல்லாருக்கு, ‘கொழுப்பு, குறைந்த, அதிக மாவு சத்து மிகுந்த ‘ டயட், ஒவ்வாது. எத்தனை குறைத்து சாப்பிட்டாலும், சுகர் மாத்திரம், , விட்டேனா பார்னு அடம் பிடிக்கும், வாய்ப்புக்கள் இருக்கலாம்..

இதை பற்றி , ‘Usenet’s diabetic groups’  ல் கிடைத்த தகவல் கச்சிதம். இந்த க்ரூப்,  நம்மை போலவே, பேந்த பேந்த விழிக்கும், பலர், அவர்கள் கவலைகளை பகிர்ந்து கொள்ளும் ஓரிடம். இதை ஆரம்பித்தவர் ஜெனிபர். ஒரு எளிமையுடன் இவர் சொல்லும் கருத்துக்கள், அருமை.:
தலையாய கருத்து ; ‘டெஸ்ட் பண்ணுங்க!!’
‘ஏன்னா, நீங்க சாப்பிடற உணவு, சக்கரையாக மாறி, எது வறையில் நிக்குது என்று டெஸ்ட் பண்ணுங்க. அதை குறித்து வைத்துக் கொள்வது அவசியம்.’
‘சாப்பாடு, எல்லா நாட்களுதம் எல்லா வேளைகளிலும் ஒரே மாதிரியாக இருக்காது. ஒரே சீராகவும் செரிக்காது. ஆகையால், மறுபடியும்,  விளைவுகைள டெஸ்ட் பண்ணுங்க. பண்ணி, மறக்காம குறித்துக் கொள்ளணும் ‘.
‘சுகர் நமக்கு சாதகமான லெவலுக்கு வந்ததான்னு பார்க்கணும்.’
இந்த முறை மிக சுலபமானது, எளிமையானது, சக்தி வாய்ந்தது. ஒரு அதிசியம் என்னான்னா இந்த ரீடிங்க், ஒருவருக்கு ஒருவர் மாறுபடும்,
ஒவ்வொரு தனி மனிதரின் உடல் எவ்வாறு அவர் உட்கொள்ளும் உணவை மாற்றுகிறது என்பது தெரிய வரும், எந்த உணவை சாப்பிட்டால் சுகர் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பது தெளிவாகும்.

உங்கள் உடலின் மாற்றங்களை உணர சோதனை செய்யுங்கள். 

 டெஸ்டிங், டெஸ்டிங் டெஸ்டிங் இது தான் மந்திரம்.’

முதல் குறிக்கோள், எதுக்காக  ரத்தத்தில் உள்ள க்ளூகோஸ் பத்தி இவ்ளோ தகவல் அவசியம்?

டாக்டர்களும், மற்றவர்களும், நம்ம ‘சுகர்’ சங்கதி தெரிய வந்தவுடனே, தொண்டை கிழிய எதை எல்லாம் சாப்பிடக் கூடாது என்பது பற்றி சொற்பொழிவு ஆற்ற ஆரம்பித்து விடுவார்கள். சில நேரங்களில், அவர்கள் சொல்வதை பின்பற்றுவதில் உள்ள சிக்கல்கள், நமக்கு தானே தெரியும்.
அதிலும் ‘கொழுப்பை அகற்று’ என்பது மகா தலைவலி. நம்ம கலாசார, உணவு முறைகளை ருசி கண்ட நாக்கு ஒத்துழைக்காமல், பழைய படி சாப்பிட்டு விட்டு, குற்ற உணர்ச்சியில் , சக்கரை அளவு அதிகமாக … இது, ஒரு வகை.


இதே சாப்பாட்டுகளை அளவோடு உண்டு, மீட்டரில், அவ்வப்போது செக் பண்ணும் போது, ரிசல்ட பாத்தா , சில பல சாப்பாட்டு அட்வைஸ்களை, ரொம்ப சீரியஸா எடுத்துக்க  வேணாமேன்னு, முடிவுக்கு வரும்  சாத்தியங்கள் உண்டு.

 ஆகையால் சாப்பாடுங்கறது, நம்ம (தனி மனிதரின்) உடல் எப்படி, எடுத்து கொள்கிறது என்று கண்டறிவது முதல் வேலை.

Blood glucose testing monitor ;

இது நம் டயபடீஸ் போரில் கை கொடுக்கும் ஆயுதம். இப்போதெல்லாம் வெளி நாடுகளில், பரிசோதனை நிலையத்திற்கு, அதிகமாக யாரும் போவதில்லை. வீட்டிலேயே, மானிடரில், சுகர், ரத்த அழுத்த தொல்லைகளை , கண்டறியும்  வசதி இருக்கிறது,
இந்த வசதிகள், இப்போது , இங்கேயும் எளிதில் வாங்க முடிகிறது.
நம் உடல் நலனை பற்றியதால் ,விலையும் அவ்வளவு அதிகமாக , கையை கடிப்பதாக படுவதில்லை. வாங்கி , அதை உபயோகிக்கும் விதம் எப்படி என்று அறிந்து கொள்ளவேண்டும்.

அடுத்தது உடல் எடையை , கட்டுப்படுத்தறது.
எப்படி என்பது நம்ம கையில் தான், அத்துடன் சீரான உடற் பயிற்சி( குறைஞ்ச பட்சம், அரை மணி , மிதமான வாக்கிங்) கட்டாயம் !!!!.


இந்த சாப்பாடு பட்டியலில் எதை சேக்கறது,  விடறது என்று, கொஞ்சம் குழப்பம் வருவது சகஜம்.

உள்ள தள்ற உணவை, ஒரு கணக்காக ,குறித்துக் கொள்வது, முக்கியம்.எதை சாப்பிட்டோம் என்ன மீட்டர் தகவல், என்ன மாற்றங்கள் செய்யலாம் ‘போர’டிக்காமல், எப்படி புது வகை உணவுகளை புகுத்தலாம், யோசனை செய்து ,, உணவு வகைகளை, திட்டமிட்டு, உண்டு, மகிழலாம்.  ( அடேடே! சுலபம் தான் போல !!!)

சரி,இப்ப எத்தையெல்லாம் சாப்பிடலாம்னு, ஒரு பார்வை.


இந்த விஷயம் எரிச்சலூட்டுவது. ‘குறைந்த கொழுப்பு, குறைந்த கலோரி, டைப் சாப்பிடுங்கள், என்று, எல்லாம் தெரிந்சவங்க, அடிக்கடி அதட்டுவாங்க. இந்த முறையில் சாப்பிட்டாலும், வயறும் , நாக்கும், மக்கர் பண்ணும், சுகரும் குறைவதில் அடம் பிடிக்கும். தலை மயிரை பிய்த்து கொண்டு, இன்னும் மாத்திரைகளை அதிகப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும் கதி பல பேருக்கு நேரிட்டிருக்கலாம். ( அப்படி இருந்திருந்தால் கொஞ்சம் பின்னூட்டதுதில் பகிர்ந்தால் நன்னாயிருக்குமே)!.

சாப்பாட்டில், சுகர் குறைகிறதா என்ற ஒரே குறிக்கோளுடன், எத்த தின்னால் சுகர் குறையும் என்ற வகைகளை நாமே பட்டியல் செய்யலாமே,


இதற்கு,Jennifer-ன் , “test , test and test” முறை கடைபிடித்து வெற்றி பெற்று பல வருடங்களாக , சக்கரை அளவே ஒரே சீராக வைத்துள்ளவர்களில், ஆலனும் ஒருவர்.
ஆலன் சொல்வதன் சாராம்சம்;
,முதலில் வெறும் வயிற்றில் , டெஸ்ட். அப்புறம் சாப்பாட்டுற்கு ஒர் மணி நேரம் கழித்து, ;
இந்த டெஸ்டினால் எந்த உணவு ஒத்துக்கொள்கிறது,  (சக்கரை அளவை அதிகமாக்காமல்) எந்த உணவு ஒத்துகொள்ளவில்லை என்று அறிய முடிகிறது.
கார்போ உணவு அளவை கணக்கிட எண்ணிலடங்கா முறைகள் பயனுள்ளதாக இருந்தாலும், அது உள்ளே போனவுடன்,  நம் உடல் மீது எத்தனை அளவில் பயன் அல்லது கெடுதல் என்பதை  தெரிந்து கொள்வது கடினமே!
ஆனால், மீட்டரில் பார்க்கும் போது நமக்கு உடனே முடிவுகளை காண்பிக்கும். க்ளூகோஸ் உச்சத்தில் இருக்கும் போது (உணவின் பிறகு,), பரீட்சை செய்து,அதிகமாக இருந்தால் , உணவில் மாற்றங்கள் செய்ய சுலபம்.

பல முறை  டெஸ்ட் செய்தால், அதே முடிவுகளை பெற வாய்ப்பு உள்ளது.
இங்கே ஒரு சின்ன குறிப்பு, அது உங்கள் உடல்நிலைக்கு மட்டுமே பொருந்தும். மற்ற நண்பர்களுக்கோ, உறவினருக்கோ , இதே டயபெடீஸ் உள்ளவருக்கோ, அது வேறே மாதிரியான முடிவுகளையே காட்டும் சாத்திய கூறுகளே அதிகம்.


நம்ம மாதிரியே, சுகர் இருக்கும்  நண்பர், எப்போதும் ‘இதை சாப்பிடு, நான் சாப்பிடுகிறேனே, நமக்கு நல்லது தான்,;ஏன் இதை சாப்பிடுகிறாய், ஒதுக்கு, ன்னு, , நம்ம போற, விசேஷத்திலே எல்லாம், உரக்க சொல்லி சக விருந்தினர்களுக்கு, ஒரு தமாஷான சூழ்நிலையை உண்டாக்கி புண்ணியம் கட்டும்போது, ‘டெஸ்டிங்’ மகிமையை அவருக்கு சுட்டி காமிக்கறது, ஒரு சந்தோஷம்!!'

தொடரும்...

பின் குறிப்பு. இது என் அனுபவங்கள். மேலும் விவரங்களுக்கு , ஆலனின் புத்தகத்தை படிக்கவும். அவரது பதிவுகளும் உண்டு. எந்த மாதிரி மாற்றத்தையும், டாக்டரிடம் கலந்து ஆலோசித்து முடிவெடுப்பது தேவை.






Wednesday, May 23, 2012

ரத்த க்ளூகோஸ் மானிடரும், என் தடுமாற்றமும்

சில நேரங்களில், வாழ்க்கை எதிர்ப்பாராத அதிர்ச்சி கொடுக்கிறது. நான் நல்ல திடகாத்திர உடல் வாகுடன், பெரிய வியாதிகளோ உபாதைகளோ இல்லாமல், மும்முரமாக வாழ்ந்த்து கொண்டிருந்தேன்.

 அதில் அலட்டல்,என் வயதில் ஒரு மருந்து மாத்திரை இல்லாமல் இருப்பது என்ற வீண் பெருமை வேறு..

 கடந்த சில ஆண்டுகள், என் வாழ்க்கை ஒரு எதிர்பாரா  திருப்புமுனையில் இருந்தது. விரும்பத்தகாத ஏற்ற தாழ்வுகளை , கொந்தளிப்பு மற்றும் நிறைய மாற்றங்களை துணிச்சலுடனும் மனோ திடத்துடனும் எதிர் கொள்ள நேரிட்டது.

 அப்போது கூட நான் எந்த சுகவீனமும் இல்லை என்று அல்ப மகிழ்ச்சியில் இருந்தேன். திடீரென்று ,  Pride went before the fall. என்ற ஆங்கில பழமொழிக்கேற்ப, உடல்நிலை , சோர்வு, வீட்டில் வேலைகளும் , குடும்ப தடுமாற்றங்களும் அலை கழித்தன. அந்த நேரங்களில் வேலையின் காரணமாக , அலைச்சலினாலும் தான் உடல் ஒத்துழைக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறதுன்னு, நானே என்னை தேற்றிக் கொண்டேன். வீட்டிலேயும் எப்பவும் இவங்க சொல்ற முனகல் தானே என்று இருந்தனர்.

 இரவு நேரங்களில் உடம்பு சோர்வு, கால் பாதங்கள் ஒரே சூடு வேறே. வியர்வை அடிக்கடி. கால் விரல்கள், அதிக நேரம் வேலை செய்தால் மரத்து போக, ஆரம்பித்தன. இதில் தீபாவளி, விருந்தினர்கள் வருகை, பேத்தி பிறந்த மகிழ்ச்சி, இன்னும் எத்தனையோ காரணங்கள், டாக்டரிட்ம் போகாமலிருக்க .. நாம தான் சொந்த வைத்யர் வேறே. ஹி..ஹி.. எல்லம் சரியா ஆகும் என்று மனதுக்கு தேறுதல் வேறே..

 படித்த, சில பல விஷய ஞானம் இருந்தும் , பயனில்லை. நடுவில் குழந்தையை பார்க்க ஒரு நீண்ட பயணம் !! அங்கே போனதும் உடல் ஒத்துழைக்க மறுத்து , சம்பந்தியும் கவலை பட , ஒரு முடிவு எடுத்தேன், ஊர் திரும்பினதும் டாக்டரை பார்த்தாகணும்னு.


 இப்போ ட்ராமா ஆரம்பம்; அந்த அய்யா நம்மளை பாத்தவுடனே பி.பி. குழாய அழுத்தி ரத்த அழுத்தம் இவ்வளவு முத்தி இருக்கேன்ன போது, நம்ம முகம் பேயறைஞ்சாயிற்று.. அடுத்து, அந்த அய்யா சொன்னது இன்னம் பலத்த அடி. சரி இத்தோட போச்சுன்னு இருக்காதீங்க, சக்கரை, பின்னடியே இருக்குது போல, டெஸ்ட் பண்ணுங்க- ன்னு சிரிச்சுகிட்டே போட்டு உடைத்தார்(ன்)! அவ்வளவு சந்தோசமா எனக்கு வியாதி வந்ததை கொண்டாடினா மாதிரி தெரிந்தது. ( அப்புறம் அந்த ஆளை பார்க்கவேயில்லயே). ஆனால் வியாதி பத்தி இப்படி அதிரடியா சொல்லி பயமுறுத்தின சீனை, எத்தனை நாளானும் மனசிலிருந்து எடுக்க முடியலையே , நாம தான் ஒரே சென்சிடிவ் ஆளாச்சே.



 அதுக்குள்ள, நம்ம குடும்ப வைத்தியர் வந்துட்டாரில்ல. அவர் ஒரு பெரிய பட்டியலை கொடுத்து, மாத்திரைங்க எல்லாம் தின்னு, ஒரு மாதம் கழிச்சு மறுபடி டெஸ்ட் பண்ணுங்க –ன்னு அன்பா சொன்னார். அவருக்கு ஒரு மகிழ்ச்சி தான் , ஏன்னா அவரும் ஒரு டயபெடாலஜிஸ்ட் !

 இனி சாப்பட்டில் இனிப்பு கூடாது, சுகர் ப்ரீ காப்பிக்கு, 5 மைல் நடங்க..எத்தன கட்டளைகளை அள்ளி வீசுராங்க!

 இது நடுவில, நம்ம பேமிலி ப்ரண்டும் ஒரு டாக்டர். அவரும் சக்கரை ஆள்தான். அவரும் தன் பங்குக்கு, ஆறுதல் சொல்லி, இன்னும் சில மருந்துகள் சாப்பிடணும்னு அறிவித்தார். நம்ம ஏகாம்பரமோ, கண்குத்தி பாம்பு மாதிரி , மாத்திரை போடு என்று அதிரடி. நாம்பளும் எல்லார் சொன்னதையும் ஒழுங்கா பாஃலொ பண்ணி, இனிதே (இனிப்பு மைனஸ்) 16 மாதங்கள் கடத்தி.. .


 அப்பாடா மாத்திரைகளை விழுங்கி, சக்கரையை அறவே நிறுத்தி, சக்கரை வியாதியை ஒரு வழி பண்ணி விட்டாச்சுன்னு, சந்தோஷம்


 இந்த கட்டத்தில, பல முறை டெஸ்டிங்க்… திடீர்ன்னு, சக்கரை மறுபடியும் … சோதனைகள் குளுக்கோஸ் அளவு இன்னும் அதிகம் காண்பித்தது நாம் தான் எல்லாத்துக்கு ஒரு விளக்கம் சொல்ல தயாரா இருக்கறமே!

 ‘ ஓ! சில நாளா, சாப்பாடு கண்ட்ரோல் தளர்ந்து விட்டது காரணம் என்று, மனச தேத்தி, டாக்டரிடமும் அதையே சொல்லி என் வைத்திய அஞ்ஞானத்தை வெளி காட்டினேன். அவர் ஒரு நமட்டு சிரிப்பு காட்டி , சுகர் மருந்தை இரட்டிப்பு செய்து, அவருக்கு தெரிந்த கடையிலேயே வாங்கணும்னு, அன்பு கட்டைளயும் இட்டார். நாம்பளும் எல்லோரும் இன்புற்று இருக்க , அப்படியே செய்தாயிற்று..



 கை நிறைய மருந்துகள், மனசில் கொஞ்சம் தயக்கம்.. அதான் .. நம்ப மூளை ஒத்துக்க மாட்டேன்னு … நமக்கு தான் மாத்திரைகள் மீது அவ்வளவா நம்பிக்கை இல்லையே..ஆனாலும் ஏகாம்பரத்தின் முறைப்புக்கு பயந்து , விழுங்க ஆரம்பித்தேன்., மூன்றே நாட்கள் தான், மாத்திரை தின்னாலும் , மயக்கமாக இருக்க ஆரம்பித்தது. படுக்கையிலே படுத்தபடி இருக்க வேண்டியதாயிற்று.

 என்னடா இது? இத்தனை மாத்திரைகள் , ஆனால் ஏன் இப்படி ஒரு சோர்வு, மண்டைக்குள் ஏதோ ஒரு படகில் போகும் ஆட்டம், ஒரே தூக்கம். என் மகளுக்கும் கொஞ்சம் கவலை வந்தது. மனதில் ஒரு யோசனை, இந்த டாக்டர் மிக அதிக அளவில் , வீரியமான மருந்துகளை கொடுக்கும் வழக்கம் உள்ளவர், ஆகவே, நம்ம கணினியை நாடி, தேட ஆரம்பித்தேன். படிக்க , படிக்க , சந்தேகம் வந்தது. மருந்து ஒரேடியாக அதிகப்படுத்தினதால் எனக்கு வந்த விளைவுகள், இருக்கலாம் என்று. மகளும் படித்துவிட்டு, அப்படியே இருக்கலாம் என்று சந்தேகப்பட்டாள்.

 உடனே டாக்டரை கேட்டால், அவர், தான் பிஸி என்றும், மருந்தை குறைத்து விடுங்கள் என்றும் கட்டைள இட்டு விட்டு, என்னை பற்றி மறந்து போனார். எனக்கு ஒரே தார்மீக கோபம், என்ன டாக்டர் இவர், பணம் தான் குறி, மருந்து கடை கூட இவர் பரிந்துறைதானே. அதிக டோஸேஜினால் வரும் விளைவுகளை என்னிடம் சொல்லாமல் இருந்ததை பற்றி எரிச்சல் வேறு. பழையபடி, குறைந்த மருந்தினால் வரும் விளைவுகளை யாரிடம் சொல்வோம் என்று தடுமாற்றம்.

 மறுபடியும், தைரியத்தை துணை கொண்டு, நம்ம சமாளிக்கலாம், சாப்பாட்லே கட்டுப்பாடு, வாக்கிங் ..( சர்க்,சரக் .. நடக்குறது அவ்வளவா விருப்பம் இல்லாம)…சில வாரங்களாயிற்று. மறுபடி, ரத்த சோதனை, நமக்கு சோதனை..

இன்னும் ரத்த க்ளூகோஸ் குறையமாட்டேன்னு அடம். இனி என்ன செய்வது? சமையல் செய்யும் போது, நமக்கு ஒன்று, தனியாக யார் செய்வார்கள் என்ற அலுப்பினால், கிடைத்ததை தின்று, அசட்டை வேறு.

 உடல், நமக்கு நினைவு படுத்தும் முறைகள், ஒரு அற்புதம். அதை புரிந்து கொள்வது முக்கியம். சக்கரை நோய் பற்றி விழிப்புணர்வு பெற , நமக்கு அதை பற்றி தெரிந்து கொள்வது முதல் வேலையாக இருக்க வேண்டும்.

 இப்போதெல்லாம் தெருவுக்கு ஒரு டாக்டர் ‘சக்கரை மருத்துவர் என்று பலகை மாட்டி , மருந்துகளை நம் வயிற்றில் போட மிக முனைப்பாக இருக்கிறார்கள். நாமும் இந்த மருந்துகள், நம் உள்ளே சென்று எந்த மாதிரியான மாற்றங்கள் செய்யவாய்ப்புள்ளன என்று தெரியாமலே , நம் உடலை இன்னும் கெடுத்து கொள்கிறோம்.

 மனதில் நச்சரிக்கும் எண்ணங்களை தடுக்க முடியாது, "நான் இதை செய்ய வேண்டும், நான் மருத்துவமனையில் படுக்கையில் முடிவடைய விரும்பவில்லை, நான் மற்றவர்களுக்கு பிரச்சினையாக இருக்க வேண்டாம்" என்று முடிவு செய்து ஒரு பெரிய சாதனை, - முதல் வேலையாக குளுக்கோஸ் மானிட்டர் வாங்கியது.



 இதில் ஏகாம்பரத்திற்கு உடன்பாடு இல்லை. ஏன் இவ்வளவு செலவு, உன்னால் அதை பயன்படுத்த முடியாவிட்டால் வீண்தானே( நம்ம சுபாவம் நம்மளை விட அவங்களுக்கு தெரியும்னு ஒரு நம்பிக்கை தான்.) நாம தான் இதை வாங்கி ஆக வேண்டும்னு அடம் பிடித்து வீட்டிற்கு கொண்டு வந்தாயிற்று..

 அவரை தவறு என்று நிரூபிப்பதற்றகாகவே, மானிடரை எப்படி பயன்படுத்துவது என்று விழித்து, ஒரு சுப தினத்தில் ஆரம்பித்தேன். (2 மாதங்கள் கழித்து).

 OneTouch அல்ட்ரா 2 புரிந்து கொள்ள முயற்சி;, 

முதல்ல, மீட்டரை வெளீலே எடுத்து, ‘ஆன்’ செய்யணும். ஊசி எடுத்து (மகள் அதை ஏற்கனவே பொறுத்தி வைத்தாள். மனதில் தைரியத்தை வரவழைத்து (முருகா மருகா,) கையில் குத்தி ஆயிற்று. ரத்தம் சொட்டு வந்தது. அந்த ‘ஸ்டிரிபை’ (கீற்று) அதன் இடத்தில் குத்தி , ஏதாவது மானிடரில் தெரிகிறதா என்று ஆவலோடு பார்த்தால்… ஒன்னும் இல்லை. அவசரமாக ‘ஸ்டிரிப்’ குப்பையில் போட்டயிற்று.

 ஏகாம்பரத்தின் பார்வையை தவிர்த்து, இனிமே ஏதானும் புது முயற்சி செய்தால், தனிமையில் செய்யணும் - ஜகா வாங்கினேன். அந்த பார்வை கொடுத்த ஊக்கம்(?) , ‘என்னால் முடியும்’ என்று மனதில் வைராக்யம், சில ஸ்டிரிப் வீணா போனாலும், எப்படியாவது , இதை செய்தே ஆக வேண்டும் என்ற உந்துதல் வேறு. அப்போதைக்கு அவசரமாகச் சுருட்டி வைத்து விட்டு, வேலையை பார்க்க போனேன். ஆனாலும் சுய பச்சாதாபத்தில் சில கண்ணீர் துளிகளை தவிர்க்கமுடியவில்லை.

அடுத்த நாள், மீண்டும், "என்னால் இதை செய்ய முடியும் " என்று,மறுமுயற்சி. தவறான பக்கத்தில் துண்டு நுழைத்து, இன்னும் ஒன்று வீணாகிவிட்டது. மரியாதையாக , விளக்க புத்தகத்தை எடுத்து (முதலிலே செய்திருக்க வேண்டிய வேலை) சரியாக படித்து, மறுமுயற்சி!

 துண்டு’ சரியான திசையில் , ஆழமாக நுழைக்க, தானாகவே கருவி, ஆன் ஆயிற்று. இறுதியாக, ‘ மானுவல்’ படிக்க பொறுமை வந்து (சரியாக மற்றும் ஆழமான துண்டு செருகி - அது தானாகவே வரும்), அதை துவக்க, உற்சாகமாக இருந்தது.

 அடுத்து, ‘ லான்சட்’. அதனுடன் தடுமாற்றம்- மேலும் தவறுதலாக 6 நிலைக்கு வைத்து, குத்தி ..’ஊச்ச்’ .. Oooch .. அதிர்ச்சி, நிலை! 3 அல்லது 4 இருத்தல் போதும் . ,சாதனை .! சோதனை செய்ய வந்து விட்டது! ஹையா! -D

 ஆனால் எல்லாவற்றையும் கிண்டலாக , வேடிக்கை யாக பார்க்க முடியவில்லை., மீட்டர் அதிகமாக , மெகா அளவீடுகளை காட்டுது.

 பரவாயில்ல, நம்மதான் உற்சாகத்தில இருக்கிறோமே, எப்படியாவது, இந்த போராட்டம் , செய்து தான் ஆக வேண்டும் , ஒரு வைராக்யம். என் க்ளூகோஸ் எண்கள், சரியான நிலை அடையும் முன் கீற்றுகள் நிறைய வீணடிக்க வேண்டும்.போனால் போகட்டும்.

 இது ஒரு ஆரம்பம்.

 PS: எனக்கு , தற்செயலாக ஒரு பெரீய்ய உற்சாகம் கிடைத்தது- வர்ஷா திவாரி என்றவர் பதிவு (http://wholesomeoptions.blogspot.com/2011/04/eat-your-way-out-of-diabetes.html), என்னை இந்த சக்கரை வியாதியை வேறே கோணத்திலும் அணுக முடியும் என்று வழிகாட்டியது..

 அந்த வலைப்பதிவில் இருந்து வந்த தகவல் ‘ஆலன் ஷான்லே’ வலைப்பதிவு, மற்றும் அவரது புத்தகம் (Alan Shanley “what one earth Can I eat”.) அந்த புத்தகத்தை பத்தி படிச்ச உடனே வாங்கி ஆக வேண்டிய உந்துதல்.

 இது மெலிதான தொகுப்பு, விலை கொஞ்சம் அதிகம், அவர் மீண்டும் மீண்டும் சொல்வது "சோதனை, சோதனை, சோதனை" கீற்றுகள் செலவு , விலை ஒன்றும் சல்லிசாக இல்லை, ஆனால் நீங்கள் உங்கள் இரத்த சர்க்கரை அளவுகளை தெரிந்து கொள்ளவும் , அளவை குறைக்க என்ன செய்யலாம் என்றும் கோடி காட்டுகிறது,

 மேலும் இந்த அளவை குறைப்பதில் நம் பங்கு தான் முக்கியம் என்றும் வலியுறுத்துகிறது. இந்த வேலையை நாம் தான் செய்யவேண்டும் என்பதால், நம் கையில் ஒரு பலம் கிடைத்த மாதிரி ஒரு திருப்தி அளிக்கிறது.

 என் இரத்த குளுக்கோஸ் அளவுடன் சண்டையிட்டு வெல்ல இந்த புத்தக ஆசிரியர் நம்பிக்கை கொடுத்திருக்கிறார். இது ஒரு சவால், ! வாசகர்களே! நான் சமாளிக்க போகிறேன். என்னால் முடியும்.

All images courtesy Google.

 தொடரும்…

Sunday, March 4, 2012

சாலை வெறி

வாகனங்களில் ரேஸ் விடும் மூர்க்க குணம் பலருக்கு உண்டு. ஓரு மனிதனின் குணாதிசயத்தை அவன் வண்டி ஓட்டும் அழகை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

 சாலைவெறி இப்போதெல்லாம் அதிகமாகி விட்டால் போல தெரிகிறது. ஒரு பேஷனாகி விட்டது. இளைஞர்களோ, பொறுப்புள்ள பணி செய்பவர்கள் ஆயினும், வண்டி கையில் இருந்தால், அவ்வளவு தான், பிச்சிகிட்டு போக அவசரம். பின்னால் வருபவரோ , முன்னால் வருபவரோ ஒரு பொருட்டே இல்லை!

 எங்கள் ஹைதெராபாத் சாலைகளின் வாகன போக்குவரத்து உலக புகழ் பெற்றது. போக்குவரத்து சிவப்பு விளக்குகள், சும்மாவே எரிகிற மாதிரி அதை அலட்சிய படுத்தி , ரோட்டு அவர்கள் சொத்து என்று போவோர்கள் அதிகம். டிராபிக் போலீஸ் , மாத்திரம் எவ்வளவு ஒழுங்கு செய்ய முடியும்?

 இன்னும் அதிக கார்கள் விற்பனை, இன்னும் வண்டி ஓட்டிகள், இன்னும் சிறந்த பகட்டான கார்கள், அற்பமான ஓனர்கள், மேலும் "வீராப்பு காட்ட விரும்பும் தறுதலைகள்" (சாலையில் மட்டும், ) எப்போதும் மீ த பர்ஸ்ட் கட்டாய ரேஸ் ஆட்கள், எல்லோரும் சேர்ந்தால் , ஒழுங்காக சாலையை பயன்படுத்த விரும்புவர்களுக்கு தலைவலி தான்..

இது சாலைகளில் மட்டுமல்ல, எங்கே வேண்டுமானாலும் நடக்கும் சாத்தியங்கள் உள்ளன. சிலர் ஸ்கூட்டரில் போகும் போது, வேகத்தை அழுத்தி , ஆரனை அடித்து , ரோட்டில் போவோர்களை கதி கலங்க அடிப்பார்கள். இந்த மாதிரி ஆட்கள் கையில் கார் கிடைத்து விட்டால் போச்! தலைவலி போய் திருகு வலி வந்தா மாதிரி தான். ஏன்தான் இப்படி? இன்னும் எனக்கு புரியவில்லை. கடவுளே ஏன் இந்த அல்பதன்மை? மற்றவர்களை விட தான் ‘பெரீய்ய இது’


                                                       (courtesy Google)

 இந்த பில்ட்டப் எதுக்காக என்றால்…

சில நாட்கள் முன்பு..

 எங்கள் வீடு ஒரு தனியான கிளை சாலையில் உள்ளது. சாலை முடிவில் ஒரு சுவர். அழகான அமைதியான இடம். நான்கே வீடுகள், முன்னாலும் ஒரு மினி காடு மாதிரி பெரிய மனை. நகரத்தில் அமைதியான தெரு என்றால் மகிழ்ச்சி தான். அக்கம் பக்கம் எல்லாம், ஒரே சமயத்தில் வீடு கட்டினவர்கள். ஆகையால் பிரச்சினைகள் அதிகம் இல்லை.

இதற்கு கண் பட்டற் போல, கடைசி வீட்டிற்கு குடி வந்தார்கள். எப்போதும் இரைச்சல் தான். இருப்பது மூன்றே பேர் ஆனாலும் அப்பா , செல் பேச ரோட்டு தான் இடம், அதுவும் சத்தமாக! கார் வீட்டின் முன்னால் நிறுத்த மாட்டார்கள். அடுத்த வீட்டின் முன் நிறுத்தி சத்தமாக டப்பங்குத்து பாட்டு போடுவார்கள். எத்தனை முறையோ எடுத்து சொல்லி , இப்போது கொஞ்சம் குறைந்திருக்கிறது. வேலைக்காரியுடனும் சத்தம் தான். இருக்கும் ஒரே சின்ன பையனும் அநாயாசமாக, கத்தல் கூச்சல் அழுகை தான்.


பெரிய வீட்டில் இருப்பவர்கள் ரோட்டில் ஏன் குடி இருக்கிறார்கள்? சின்ன வயசில் ரோட்டில் வாழ்ந்து வழக்கமோ?

அந்த மனிதனின் காரில் வரும் பாட்டுக்களும் அந்த ஆரன் அடிக்கும் சத்தமும் , இரவு எந்த நேரமும் கேட்கலாம். அவன் காரை வேகமாக, சர்ர்என்று வளைத்து, இந்த கிளை ரோட்டுகளில் (‘யூ வளைவு’) வேகமாக ஓட்டுவது பெரிய ரோதனை. அவன் ஆர்ன் அடிக்கும் சத்தம் காதில் விழுவதற்கு முன்பே, கார் வீட்டின் முன்பு மின்னல் வேகத்தில் நிற்க வேண்டும் என்பது ஒரு வழக்கமாக இருக்கிறது. இந்த அமைதியான இடத்தில் யாருடைய தூக்கத்தை பற்றியோ ஓய்வெடுக்கும் குழந்தைகளை பற்றியோ கவலை கிடையாது.

இன்னும் பெரிய ரோதனை அவன் ரிவர்ஸ் எடுப்பது. ஆரனை வேகமாக அடித்தோ அடிக்காமலோ, 70 வேகத்தில் எடுப்பான். பின்னால் இருப்பவர்களோ, திருப்பத்தில் வருபவர்களோ, அதிர்ஷ்ட வசமா மாட்டாமல் இருந்தால் சரி!

எங்கள் வீட்டு காம்பவுண்டு சுவரில் சில மாற்றங்கள் செய்யும் போதும் இதே கதை தான். அவன் அடித்த ரிவர்ஸ் வேகத்தில், எங்கள் கூலி ஆள் தன்னுடைய சாமான்களை அப்படியே கடாசி விட்டு, ஓரே பாய்ச்சலில் ஓடினார். சாமான்கள் அந்த வேகத்தில் அப்படியே தெறித்து எகிறின. அதை பார்த்துக் கோண்டே இன்னும் வேகமாக காரை ஓட்டி சென்று விட்டான். எங்களுக்கு ஒரே அதிர்ச்சி!


பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் ஆயிற்றே , எதாவது ஆகி இருந்தால்….. என்று ஒரு சொல் கூட இல்லை. திரும்பி வந்தவுடனாவது , ஏதாவது சொல்வான் என்று எதிர் பார்த்தால் கண்டுக்கவே இல்லை.

இரண்டு நாட்கள் கழித்து , வழியில் பார்த்து கேட்டால் ‘ ஓ கே.. சாரீ.. என்று ஒரு முரட்டு தன்மையுடைய குரலில் இருந்தது ஒரே சொல் தான்!!


அந்த ‘நல்ல வழக்கங்கள்’ இன்னமும் அப்படியே.


மறுபடியும் சில நாட்களுக்கு முன்பு ஒரு மாலை நேரத்தில், வாசலில் வைத்திருந்த எங்கள் ஸ்கூட்டரை கீழே இடித்து தள்ளி விட்டு வழக்கம் போல வேகமெடுத்து போய்விட்டான். ஆனால் அதை பார்த்த பக்கத்து வீட்டு பெரியவர் சத்தம் போடவே பெரிய மனது பண்ணி , காரை தூரத்தில் நிறுத்தி, ஸகூட்டரை எடுத்து வைத்து விட்டு போய்விட்டான்.

அந்த பெரியவர் எங்களை கூப்பிட்டு நடந்ததை விவரித்தார். அவரும் இந்த ஆள் செய்வது நன்றாகவே இல்லை என்று வருந்தினார். நாங்கள் அவன் வீட்டில் போய் மனைவியிடம் சொன்னபோது, அந்த அந்தம்மா ,மெத்தனமாக ‘சரி நான் சொல்கிறேன்’ என்றார். ஏதோ அவர் கணவர் இப்படி வெறி பிடித்தால் போல கார் ஓட்டுவது தெரியாதா என்ன?

அவ்வளவு எளிதாக அவன் எங்களுக்கு ஏதேனும் ஆறுதல் சொல்வான் என்று நாங்களும் எதிர் பார்க்கவில்லை. நான் அவனை ரோட்டில் பிடித்து கேட்கும் வரை அவன் , ‘அது நான் இல்லையே’ என்று முதலில் மறுத்து, பிறகு, அரை மனதாக ‘சாரி’ என்று சொல்லி வைத்தான்.
                                                   (courtesy Google)

அவன் வாழ்க்கை முறையே ‘அலட்டல் , பீற்றல் ‘ தான். அவன் எப்படி மாறுவான்? இன்று வரை அவன் திருந்தவில்லை. இந்த மாதிரி ஒரு படித்த , அரக்கன் ஏன் எங்கள் அழகிய வீதிக்கு குடி வந்தானோ! கடவுளே!